மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு, கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் 27.06.2026 சனிக்கிழமை சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, புதூர் மு.பூமிநாதன், சு.ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம்: 1 - திமுக கூட்டணியில் இருந்து விலகல் மறுமலர்ச்சி திமுக, 2017 டிசம்பர் 3 ஆம் தேதி நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த ஒன்பது வருடங்களாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து வந்தது. தமிழ்நாட்டில் மதவாத அரசியல் சக்திகளை காலூன்ற விடாமல் தடுப்பதற்கும், திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியக் கோட்பாடுகளைத் தகர்ப்பதற்கு விடப்படும் அறைகூவல்களை முறியடிக்கவும் மறுமலர்ச்சி திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொள்கை அடிப்படையில் இடம் பெற்று இருந்தது.
கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவ அடையாளத்தையும், 32 ஆண்டு கால தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்ட செயல்பாடுகளையும் நீர்த்துப்போக செய்யும் முயற்சிகள் கூட்டணியில் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, எடுத்த முடிவில் உறுதியாக இருந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தோம்.
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே மே 1 ஆம் தேதி கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பத்திரிக்கை ஊடகங்களில் தீர்க்கமாக கூறியவாறு தமிழ்நாடு அரசியலில் அதிசயிக்கத்தக்க வகையில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு பேராதரவை வழங்கி இருந்தனர். தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அரசியல் களத்தில் நடைபெற்ற திரை மறைவு பேரங்கள், மக்கள் வழங்கியத் தீர்ப்புக்கு எதிராக இருந்ததை அனைவரும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இந்துத்துவ மதவாத சக்திகளோடு கரம் கோர்த்துக் கொண்டு கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலில், வெறும் 47 இடங்களில் வெற்றி பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது ஊரறிந்த இரகசியமே;
இதன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கொள்கை கூட்டணி என்று பிரகடனம் செய்யப்பட்டதெல்லாம், சில அக்கறை உள்ள சக்திகளால் பொருளற்றதாக ஆக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இனியும், திமுக தலைமையிலான கூட்டணியில் தொடரக் கூடாது என்று கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். எனவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்று கழகப் பொதுக்குழு முடிவு செய்கிறது. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கழகம் மேற்கொள்வது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம்: 2 - வாக்காளர்களுக்கும் களப்பணியாளர்களுக்கும் நன்றி சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடையநல்லூர் மற்றும் சீர்காழி தொகுதிகளில் போட்டியிட்ட திரு. தி.மு.இராசேந்திரன், திரு இரா.செந்தில்செல்வன் ஆகியோரை ஆதரித்து வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும், களப்பணியாற்றிய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் இப்பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்: 3 - புதிய அரசுக்கு வாழ்த்து மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இயற்கை நெறிமுறைகளுக்கு இணங்க சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்திற்கு அடிகோலிய தமிழக மக்கள், ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைவதற்கு தீர்ப்பு வழங்கினார்கள். இந்தியத் துணை கண்டத்திற்கு வழிகாட்டக்கூடிய தமிழ்நாடு இதுவரை பின்பற்றி வந்திருக்கின்ற மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்துவ கோட்பாடுகள், மாநில உரிமை, தமிழ், தமிழ்நாடு, தமிழர் நலன் ஆகியவற்றில் சமரசத்திற்கு இடமின்றி, புதிய அரசு தமிழ்நாட்டின் தனித்துவ சிறப்புகளை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மறுமலர்ச்சி திமுக பொதுக்குழு ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்: 4 - மேகேதாட்டு அணை விவகாரம் தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றின் குறுக்கே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேகேதாட்டு அணைக் கட்ட கர்நாடக மாநில அரசு முனைப்பாக செயல்படுவது கண்டனத்திற்குரியது. கர்நாடக மாநில அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, மேகேதாட்டு அணை கட்டுவதற்கான புதிய திட்ட அறிக்கையை ஒன்றிய அரசின் நீர்வளத் துறைக்கு அனுப்பலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு தமிழ்நாடு மாநில அரசு தரப்புக்கு பின்னடைவை தந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மேகேதாட்டு அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு விட்டதாக கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் திரு டி.கே.சிவக்குமார் கூறி வருவது ஏற்கத்தக்கதல்ல.
2007 பிப்ரவரி 5 ஆம் தேதி வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி, கடை மடை பகுதியான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக மாநிலம் காவிரியில் எவ்வித நீர்த்தேக்கங்களையும் அமைக்க முடியாது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் முதல்வரின் தனித் தீர்மானத்தில் மேகேதாட்டு அணை தொடர்பாக முடிவு எடுக்க புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மேகேதாட்டு அணை கட்டவே கூடாது என்பதுதான் தமிழ்நாடு இதுவரை மேற்கொண்டிருந்த நிலைப்பாடு ஆகும். தற்போது புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, மேகேதாட்டு அணை குறித்து முடிவு செய்யக் கோருவது கர்நாடக மாநிலத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். எனவே தமிழ்நாடு அரசு மேகேதாட்டு அணைப் பிரச்சனையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திரும்பப் பெறுவதுடன், அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, அதில் விவசாய சங்கங்களையும் பங்கேற்கச் செய்து கருத்துக்களைக் கேட்டு கலந்தாய்வு செய்து தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலை நிறுத்த வேண்டும் என்று கழகப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 5 - பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டம் மற்றும் நிதியொதுக்கீடு தேசிய கல்விக் கொள்கை 2020இன் தொடர்ச்சியாக, 'பிரைம் மினிஸ்டர்ஸ் ஸ்கூல்ஸ் ஆப் ரைசிங் இந்தியா' எனப்படும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை, ஒன்றிய அரசு கடந்த 2022 இல் அறிமுகம் செய்தது. நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துதல், மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பம், ஆய்வகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்துக்கான நிதியில் 60 சதவீதத்தை ஒன்றிய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். பெரும்பாலான மாநிலங்கள் இதில் இணைந்து விட்டன. ஆனால், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை இருப்பதால், திமுக தலைமையிலான முன்னைய அரசு ஏற்கெனவே பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கையே போதும் எனக் கூறி இந்தத் திட்டத்தில் இணைய மறுத்துவிட்டது. இதனால், ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா) கல்வி நிதிக்காக ஒதுக்கும் ரூ.3,500 கோடியை தமிழக அரசுக்கு வழங்காமல் நிறுத்தி வைத்தது.
தற்போது ஒன்றிய அரசு மீண்டும் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனடியாக ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, தமிழ்நாட்டில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதில் உறுதியாக இருப்பதுடன், ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டின் கல்வி நிதியைப் போராடி பெற வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 6 - நீட் தேர்வு ரத்து மற்றும் விலக்கு 2026-2027-ஆம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் ஜூன் 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஆனால், நீட் தேர்வில் முறேகீடு நடந்தது தெரிய வந்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக அந்த தேர்வு ரத்துசெய்யப்பட்ட நிலையில், ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நீட் தேர்வு எழுத அச்சம் காரணமாக தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பல நகரங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே கடந்த 17-ஆம் தேதி கோவையை சேர்ந்த மாணவி அனுகீர்த்தனா இதே காரணத்தால் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவது மகள் ரோஷிணி, நாமக்கல்லில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதி தருமபுரியில் மறு தேர்வை எழுத இருந்த முதல் நாள் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை மந்தைவெளியை சேர்ந்த பிரபாகரன் அவர்களின் மகள் வித்யா 3 முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.
2017-ஆம் ஆண்டில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்டோரும், தமிழ்நாட்டில் 40 பேரும் அத்தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்களின் தற்கொலைக்கு வழி வகுத்ததைத் தவிர, நீட் தேர்வால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பது கடந்த 10 ஆண்டுகால புள்ளிவிவரங்களில் இருந்து உறுதியாகிறது. இதை உணர்ந்து ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 7 - டாஸ்மாக் கமிஷன் ரத்து மற்றும் முழு மதுவிலக்கு தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,048 மதுக்கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. இதற்காக, 11 மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வெளிநாட்டு மது வகைகளும்; ஏழு நிறுவனங்களிடம் இருந்து, பீர் வகைகளும் கொள்முதல் செய்யப்படுகின்றன. டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து மாதந்தோறும் கொள்முதல் ஆணை கிடைத்த உடனே, மதுபான பெட்டி விலைக்கான ஆயத்தீர்வை வரியை, தமிழக அரசுக்கு மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இது தவிர, ஒவ்வொரு பெட்டிக்கும் தலா, 60 ரூபாய் 'கமிஷன்' தொகையாக, முந்தைய ஆட்சியாளர்களுக்கு கட்சி நிதியாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மதுபான பெட்டிக்கு 60 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு வந்த கமிஷன் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால், அந்நிறுவனங்களுக்கு மாதம் 51 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து, இதுவரை கமிஷனாக பெறப்பட்டு வந்த பணத்தை, அதிகாரப்பூர்வமாக அரசுக்கு கிடைக்கும் வழியை தமிழக முதல்வர் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இதன்படி, மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் பீர் வகை பெட்டி ஒன்றுக்கு 40 ரூபாயும், மது வகை பெட்டிக்கு 90 ரூபாயும், சிறப்பு கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரசின் கருவூலத்திற்கு வரவேண்டிய தொகையை தனி நபர்கள் சுரண்டிச் சென்றதை தடுத்து நிறுத்தி, அரசுக்கு வருவாய் கிடைக்க வழி செய்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை மதிமுக பொதுக்குழு வரவேற்கிறது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டது பாராட்டுக்குரியது. ஆனால் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் கடந்த ஆட்சி காலத்தில் உரிமங்கள் வழங்கப்பட்டு மதுபான கடைகள் தாராளமாக இயங்கி வருகின்றன. அவற்றையும் மூடுவதுடன், படிப்படியாக மதுபான கடைகள் அனைத்தையும் மூடி முழு மதுவிலக்கை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 8 - உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விலை உயர்வு மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, தமிழகத்தில் உரம் விலை திடீரென்று உயர்ந்துள்ளது. பொட்டாஷ் உரம் ரூ.1,850-லிருந்து ரூ.2,250 ஆகவும், பாக்டம்பாஸ் ரூ.1,750-லிருந்து ரூ.2,150 ஆகவும், அம்மோனியம் சல்பேட் ரூ.1,200-லிருந்து ரூ.1,400 ஆகவும் உயர்ந்துள்ளது. காம்ப்ளக்ஸ் ரூ. 1,550-லிருந்து ரூ. 2,200 ஆகவும் உயர்ந்துள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். எனவே ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் யூரியா, உரம் விலையை கட்டுப்படுத்த வேண்டுமென்று கழகப் பொது குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 9 - பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு இந்திய நிறுவனங்கள் கடந்த மே 15 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தத் தொடங்கின. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 107.87 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 99.65 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ சிஎன்ஜி 97 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஈரான் போர் காரணமாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 8 ரூபாய் விலை உயர்ந்துள்ளன. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலையில் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி ரூபாய் 60 உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு, ஜூன் 7 ஆம் தேதி 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலையில் மேலும் 29 ரூபாய் உயர்த்தியது. இதனால் சமையல் எரிவாயு உருளையின் விலை 957 ரூபாய் 50 ஆக அதிகரித்து விட்டது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்று கழக பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 10 - பருத்தி இறக்குமதி வரிவிலக்கு கடந்த மே 30 ஆம் தேதி ஒன்றிய அரசின் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் சுங்க வரி மற்றும் 'வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம்' ஆகியவற்றில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்திக்கு தற்காலிக வரி விலக்கை, சீசன் அல்லாத காலங்களில் தொழில்துறையினர் பயனடையும் வகையில் நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் என்று ஜவுளி தொழில்துறையினர் விடுத்துள்ள கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் கவனத்திற்குச் கொண்டு செல்ல வேண்டும் என கழகப் பொது குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 11 - பொள்ளாச்சி மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம் 1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் போராடிய பொழுது பொள்ளாச்சி நகரில் நூற்றுக்கணக்கானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த தியாகத்தை போற்றும் வண்ணம் ஆதிக்க இந்தியை எதிர்த்து அன்னை தமிழ்மொழி காக்க தங்கள் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு பொள்ளாச்சி நகரில் மொழிப்போர் அருங்காட்சியகமும் நூலகத்தோடு கூடிய மொழிப்போர் மணிமண்டபம் அமைத்து மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று அரசு சார்பில் மரியாதை செலுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுக் குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 12 - தேங்காய் மீதான செஸ் வரி நீக்கம் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், தென்காசி போன்ற மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் தேங்காய்க்கு தமிழ்நாடு அரசு 1 விழுக்காடு செஸ் வரி வசூல் செய்து வருகிறது. கேரளா, கர்நாடகம் போன்ற தேங்காய் அதிகம் விளையும் மாநிலங்களில் தேங்காய்க்கு செஸ் வரி இல்லை. மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை நீக்கியதை போல அழுகும் பொருளான தேங்காய் மீதான செஸ் வரியை நீக்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என கழக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 13 - வினாத்தாள் கசிவு மற்றும் டிஜிட்டல் முறைகேடு விசாரணை ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கண்காணிப்பில் தொடர்ந்து அரங்கேறி வரும் வினாத்தாள் கசிவு முறைகேடுகள், லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தையும், அவர்களது கனவுகளையும் சிதைத்து விட்டன. பல ஆண்டுகள் கடுமையாகப் படித்து நீட் தேர்வை எழுதிய 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் வாழ்வாதாரம் வினாத் தாள் கசிவு காரணமாக கேள்விக்குறியாகி உள்ளது. நீட் தேர்வு மட்டுமின்றி, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு மதிப்பீட்டிலும் மிகப்பெரிய டிஜிட்டல் முறைகேடு நடந்துள்ளது. விடைத்தாள்களை இணையதளத்தில் திருத்தும் 'ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்' (ஓஎஸ்எம்) என்ற புதிய முறை அவசர அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்டது ஏன்? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இந்த டிஜிட்டல் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற்ற 'கோயம்ட்' என்ற நிறுவனம், ஏற்கனவே தெலங்கானா அரசால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ஒன்று என்பது எத்திகல் ஹேக்கர்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவதற்காக விதிகளில் 3 முறை தளர்வுகள் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இதற்காக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்; தேசிய தேர்வு முகமை, சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை குறித்து குறிப்பிட்ட கால வரம்பிற்குள் சுதந்திரமான நீதித்துறை அல்லது வல்லுநர் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 14 - நெல் கொள்முதல் மற்றும் சேமிப்புக் கிடங்கு கட்டமைப்பு தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் கொள்முதல் செய்திருக்கும் நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக இந்த நெல் மூட்டைகள் நீரில் நனைந்து வீணாகி வருகிறது. விவசாயிகளின் கவலையைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக நெல்மூட்டைகளை சேமிப்பதற்கு உரிய கட்டமைப்புகளை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 15 - சீமைக் கருவேல மரங்கள் அகற்றம் தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கழகப் பொதுச் செயலர் வைகோ அவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவில், "தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் உரிய வகையில் அகற்றப்பட வேண்டும். இதற்காக 39 வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் ஓய்வுபெற்ற இரு நீதிபதிகள் தலைமையிலான குழுவினர் (நீதிபதி ஏ.செல்வம் மற்றும் நீதிபதி பாரதிதாசன்) கண்காணிப்பர்" என்று குறிப்பிட்டு இருந்தனர்.
விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக போராடி இந்த வழக்கில் உத்தரவு பெற்றுத் தந்த கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு பொதுக்குழு பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசு போர்க் கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 16 - அரசுத் துறை காலிப் பணியிடங்கள் நிரப்புதல் தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் உள்ளன. அவற்றில் காலியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சம் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசு, அரசுத் துறைகளில் உள்ள அனைத்துக் காலியிடங்களும் நிரப்பப்படும் என்று அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கழகப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 17 - அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கடந்த ஐந்தாண்டு காலமாக கீழ்கண்ட இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வந்தனர்.
அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 இன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்பட வேண்டும்.
கொரோனா பேரிடரில் மக்களை காப்பாற்றப் போராடி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு உரிய நிவாரணமும், அரசு வேலைக்கான ஆணையும் முதல்வரின் கைகளால் வழங்கி, அந்த குடும்பத்தின் கண்ணீரை துடைக்க வேண்டும். இக் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை பரிசீலித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 18 - மின்வாரிய கேங்மேன் பணியாளர்கள் நியமனம் தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான கள உதவியாளர் (Field Assistant) மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2020-ஆம் ஆண்டு கேங்மேன் பணிக்கு தேர்வான நிலையில் அவர்களுக்கு நிரந்தர பணி வழங்காமல், தற்போது ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின் துறையில் பணி செய்து வரும் 5,000 நபர்களை கேங்மேன்களாக பணி அமர்த்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். மின்வாரியத்தில் நீண்ட காலமாக பணியாற்றி அனுபவம் பெற்றுள்ள கேங்மேன் பணியாளர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கி, காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் அவர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.




