கன்னியாகுமரியில் இயங்கிவரும் ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் (Indian Rare Earths Limited) கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்கிடாவிடம், மிடாலம், இனயம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் அணுக்கனிம சுரங்கங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடற்கரை ஒழுங்குற்று மண்டல அனுமதிகோரி ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் 2024 அக்டோபர் 1 ஆம் தேதி இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது என அறிவிக்கப்பட்டது.
இந்திய சட்டங்கள் கனிமங்களை பலவகையில் வகைப்படுத்துகின்றன. அணுக்கதிர்வீச்சு தன்மையுடைய கனிமங்கள் தொடர்பான செயல்பாடுகளை அணுசக்தி சட்டவிதிகள், 1984, [Atomic Energy (Working of the Mines, Minerals, and Handling of Prescribed Substance) Rules, 1984] கட்டுப்படுத்துகின்றன. அதன்படி, மோனசைட், சிரகான், இல்கமனைட், ரூட்டைல், சிலிகனைட், லூராக்ஸின் மற்றும் கார்னெட் ஆகிய அணுக்கதிர்யக்க கனிமங்களை இச்சட்டம் கட்டுப்படுத்துகிறது.
இதில், மோனசைட் என்பது மேற்கூறிய அணுசக்தி சட்டவிதிகளின்படி Prescribed Substance ஆகும். மோனசைட் உள்ளடக்கிய கனிம படிமத்தினை அகழ்வு செய்வதற்கும், அதனை கையாளுவதற்கும், மத்திய பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.இ.எல்-க்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணு சக்தித்துறை கன்னியாகுமரி மாவட்டத்தில் மோனசைட் கனிமம் மிகுந்த 1144.0618 ஹெக்டேர் பரப்பிலான பகுதிகளில் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசின் இசைவையும், மத்திய சுரங்க அமைச்சக அனுமதியினையும் பெற்றுள்ளது. கிள்ளியூர் தாலுகாவில் உள்ள கீழ்கிடாவிடம், மிடாலம், இனயம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய பகுதிகளில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் அமைய இருக்கும் மொத்தப் பரப்பளவான 1144.0618 ஹெக்டேரில் 353.4076 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட கடலோர மண்டலத்தின் கீழ் வருகிறது. சுமார் 59.88 மில்லியன் டன் அளவிலான அணுக்கனிமங்கள் வெட்டியெடுக்கப்படலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது. அகழ்ந்தெடுக்கக்கூடிய கனிம படிமத்தில், அணுக்கனிமங்களின் அளவு 10% முதல் 22% வரை உள்ளது. இதனடிப்படையில், புதிய சுரங்க குத்தகை மூலம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன் என்ற வீதத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மணவாளக்குறிச்சி ஆலைக்குத் தேவையான மூலப் பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்படும் என ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் அமைந்திருக்கும் இடம் இயற்கையாகவே அதிக கதிரியக்கத் தன்மை உடைய பகுதிகளாகும். இந்த நிலையில் அணுக்கனிமங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டால், அணுக்கதிரியக்க பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் உள்ள 75 கடலோரக் கிராமங்களில் ஏறத்தாழ 50 கிராமங்கள் ஏற்கனவே தாதுமணல் கொள்ளையால் பெரும் பாதிப்படைந்துள்ளன. குமரி முதல் தூத்துக்குடி வரை நடந்தே செல்லக்கூடியதாக இருந்த கடற்கரையின் நிலை மாறி, இன்று பல கிராமங்களில் கடற்கரையே இல்லாமல் போய்விட்டது. கடலோரங்களில் இருந்த மணற்குன்றுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் கடல்சீற்றம் அதிகமாகிவிட்டது.
கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாகிவிட்டது. கடற்கரையும் கடலோரத் தாவரங்களும் அழிக்கப்பட்டதால் இனப்பெருக்கத்திற்காக நிலத்தையும் உணவிற்காகக் கடலையும் நம்பி வாழும் இருவாச்சி களை ஆமைகள் இக் கடலோரத்தின் பல பகுதிகளுக்கு வந்து முட்டையிடுவதை நிறுத்திவிட்டன. கடற்கரையின் வளம் அழிக்கப்பட்டதால் அது ஆழ்கடற்பகுதியின் வளத்தையும் அழித்துவிடும். இந்த நிலையில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் பாதிப்புகள் இன்னும் பன்மடங்கு உயரக் கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே நடைபெற்ற தாதுமணல் கொள்ளையால் மீனவ கிராமங்களில் வசிக்கும் பலருக்குப் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு, மலட்டுத் தன்மை, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முழுக்க முழுக்க கடற்கரையிலேயே அமர்ந்து கொண்டும், நடந்து கொண்டும் வேலை பார்க்கும் மீனவர்களுக்கு கதிரியக்கம் நிறைந்த மணற்பகுதியை அண்டுகையால் கதிரியக்க பாதிப்பு அதிகம் நேர்கிறது. கூத்தங்குழி, மணவாளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் அதிகம் பேர் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தென்மாவட்ட கடற்கரைப் பகுதிகள் புவி வெப்பமயமாதலால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தாலும் அறிவியல் பூர்வமற்ற மனித செயல்பாடுகளாலும் வேகமாக அரிப்புக்குள்ளாகி வருகிறது. ஒன்றிய புவி அறிவியல் துறையின் ஆய்வு அறிக்கையின்படி கன்னியாகுமரி மாவட்டத்தின் 69.06 கி.மீ. கடற்கரை நீளத்தில் 44.56 கி.மீ. கடற்கரை அரிப்புக்குள்ளாகி வருவதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக இனயம், புத்தன்துறை, மிடாலம், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களின் கடற்கரைகளில் கடலரிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இப்படியான பகுதிகளில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்காக மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு ஆணையை ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதாக கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
"அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஓராண்டு கால நீட்டிப்பு அரசாணையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், மக்களைப் பாதிக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்காது இந்தக் கோரிக்கையின் மீது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்து உள்ளதாகவும்" அமைச்சர் ராஜேஷ்குமார் தனது சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.








