'முரசொலி' நாளேட்டில் ஏழு ஆண்டுகள் துணை ஆசிரியராக பணியாற்றிய வரும், பி.எஸ். இளங்கோவின் 'மாலை மணி' நாளேட்டின் துணை ஆசிரியராக பணியாற்றியவரும், 'எரியீட்டி' நாளேட்டின் ஆசிரியருமான புலவர் என்.வி.கலைமணி அவர்களின் 'இதழியல் கலை அன்றும் இன்றும்' என்ற நூலினை 2013 ஆம் ஆண்டில் எழுதினார். அதனை தமிழ்க் குடியரசு பதிப்பகம் வெளியிட்டது.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இதழியல் துறையின் வரலாற்றினை விளக்கும் இந்நூலில், திராவிடர் இயக்க இதழ்களின் வரிசையில் நமது 'சங்கொலி' இதழின் சிறப்புக்களை புலவர் என்.வி.கலைமணி பதிவு செய்துள்ளார்.
"மறுமலர்ச்சி திமுகவின் பொதுச்செயலாளராக பணியாற்றிவரும் வை.கோபால்சாமி எனப்படும் வைகோ சங்கொலி பத்திரிக்கையின் ஆசிரியராக, அதை வார இதழாக்கி, மதிமுகவின் கொள்கை பரப்பும் ஏடாக நடத்தி வருகிறார்.
திராவிடர் இயக்கத்தின் ஆரம்ப காலத்தில், அதாவது 1944 ஆம் ஆண்டு முதல் 1967 வரை திராவிடர் இயக்க பத்திரிகைகள் எவ்வாறு உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டு வந்தன என்பதற்குரிய அடையாளம் தேவையா? இன்றைய, 24 பக்கம் அளவுடன், வெளிவந்து கொண்டிருக்கும் டபுள் டெம்மி 1×4 அளவுள்ள சங்கொலி வார இதழை வாங்கி படித்துப் பார்த்தாலே போதுமானது!
சங்கொலி இதழின் தோற்றம், அழகுமிகு தலைப்புகள், கட்டுரைக் கருத்துக்கள் எல்லாமே அறிஞர் அண்ணா காலத்து வடிவமாகவே தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டிருக்கிறது. திராவிட நாடு, முரசொலி, தென்றல், தீப்பொறி, எரியீட்டி, சவுக்கடி, மாலை மணி, போர்வாள் போன்ற ஏடுகள் எப்படிப்பட்ட பரபரப்பையும், விறுவிறுப்பையும், எதிர்பார்ப்பையும் அன்று உருவாக்கி, கொள்கை பரப்பும் பரணியைப் பாடினவோ, அதையே இன்றும் சங்கொலி முழக்கம் எழுப்பி சங்கநாதம் செய்து வருகின்றது. அதற்கு வைகோவின் புயல்வேக பேச்சும், எழுத்தும் கழக யூக வியூக ஆக்கப்பணிகளும்தான் விதைகளாகும்.
அட்டாவதானியாக, தசாவதானியாக, சோடசாவதானியாக, அவதானக்கலையை அரசியல், சமுதாயம், இனம், மொழி போன்ற துறைகளில் ஆய்வு செய்து அவைகளை கட்டுரை வடிவில் தேர்வு செய்து, அத்தனை திருப்புமுனை கருத்துக்களையும் வாரம் தோறும், தனது வாசகர்களுக்கு கற்பிக்கும் ஆசானாக சங்கொலி இசை பாடி உலா வருகிறது.
சங்கொலி என்பது அரசியல் உலகில் பணம் திரட்டும் ஒரு விளையாட்டு இதழ் அன்று. முதல் பிரசவம் கடும் வலிகளைக் கொண்டிருந்தாலும், அது ஒரு சாதனையாகும். அதைப்போன்றதே சங்கொலி பத்திரிகை வெளியீடும். இத்தகைய ஒரு வலி தரும் பத்திரிகையை தினம்தோறும் நடத்துபவனுக்குத் தான் அந்த பத்திரிகையின் வார பிரதிவார பிறப்பின் அருமைகள் தெரியும். அந்த தோற்ற பெருமைகளை சங்கொலி கொள்கை நாதங்களென எழுப்பி நமக்கெலாம் உவகை மழலை ஒலிகளை வழங்கி வருகிறது.
சங்கொலி மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்குரிய வார இதழாக, அதன் வளர்ச்சிக்குரிய சங்கொலியை வாரம் தோறும் போர்களச் சங்கு போல ஒலித்து, திராவிடர் இயக்கத்தை தட்டி எழுப்பி, கோட்டைக்குப்போக பாதை அமைத்து வருகிறது. இந்த கழகத்திற்கு அவசியம் ஒரு நாளேடு தேவை. வாழ்க சங்கொலி முழக்கங்கள்!"
என்.வி.கலைமணி அவர்களின் மேற்கண்ட பாராட்டு வரிகள், சங்கொலியின் சலியாத உழைப்பிற்கு கிடைத்திட்ட பாராட்டு, புகழ்மாலை அல்லவா?
இவரைப்போல தகைசால் தமிழர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், நம் நினைவில் வாழும் தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் நம் சங்கொலி இதழை பலமுறை பாராட்டி பெருமைப்படுத்தினார். திருச்சி திருவரங்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் தி.க. தோழர் விடுதலை அரசு, தி.மு.கழகத்தில் இருந்து நம் இயக்கத்தில் இணைந்த அன்பழகன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், அய்யா நல்லக்கண்ணு, திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பரமத்தி சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.
அந்த விழாவில் தோழர் ஆர்.என்.கே. அவர்கள், எளியவன் எனக்கு 'பெரியார் விருது' வழங்கி பாராட்டி உரையாற்றினார். அப்போது சங்கொலி ஏட்டின் வாசகன் என்று தம்மை பெருமையுடன் அவர் குறிப்பிட்டார்கள். திராவிட இயக்கத்தின் பழைய ஏடுகளைப் பட்டியல் இட்டுக்காட்டி, அந்த வரிசையில், இன்று வெளிவந்து கொண்டிருக்கிற ஒரே இதழ் 'சங்கொலி'தான் என்று சொல்லிவிட்டு, சங்கொலியின் தலையங்கம், கட்டுரைகள், தலைவர்களின் உரைகள் ஆகிய பகுதிகளையும் சுட்டிக் காட்டி, சங்கொலிக்கு புகழ் மாலை சூட்டினார். அவரை சந்திக்கும் போதெல்லாம், சங்கொலி இதழ் குறித்து பெருமைபட பேசுவது அவர் வழக்கம்!
அவரைப்போலவே, திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களும், 'சங்கொலி' இதழை பாராட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார். பத்திரிகை நடத்துவது என்பது வெள்ளை யானையைக் கட்டி தீனி போடுவது போல சிரமமானது; அந்த பணியை நீங்கள் தொடர்ந்து செய்து வருகிறீர்கள்; சங்கொலியின் தலையங்கம், கட்டுரைகள் முதலியன மிக மிக சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் இதழ் கைக்கு வந்ததும், படித்து முடித்துவிடுவேன் என்று ஆசிரியர் புகழ்ந்துரைத்தது, சங்கொலி ஏட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாகும்; பாராட்டுப்பத்திரம் ஆகும்!
தலைவர் வைகோ அவர்களின் 'ஆம் நம்மால் முடியும்' என்ற அமெரிக்க பயணக் கட்டுரை சங்கொலி இதழில் தொடராக வெளிவந்ததை சிந்தனையாளன் இதழ் ஆசிரியர் வே.ஆனைமுத்து அவர்கள் மனம் திறந்து பாராட்டினார். "இந்தக் கட்டுரை ஆய்வுக் கட்டுரையாக அமைந்துள்ளது. கருப்பர்களின் வரலாற்றை இந்த அளவுக்கு தமிழில் இதுவரை யாரும் எழுதவில்லை. மிக அருமை. இதை உடனே நூலாக பதிப்பியுங்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் தம்பிகளுக்கு கடிதம் எழுதி வந்ததுபோல் இயக்கத் தோழர்களை கொள்கை அடிப்படையில் வார்ப்பிக்கின்ற பணியை அருமையாக செய்து வருகிறார் வைகோ! சங்கொலி சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள்." என்ற அவரின் பாராட்டு சங்கொலி (06.06.2006) இதழில் வெளியானது.
சிந்தனையாளர் கழகத்தின் சார்பில், பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தியபோது, அதன் முன்பதிவுத் திட்டம் குறித்தும், நூல் வெளியீட்டு விழா குறித்தும், சிந்தனையாளன் விளம்பரத்தினை, அதற்குரிய கட்டணத்திற்கான காசோலையையும் இணைத்து சிந்தனையாளன் ஆசிரியர் அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் சங்கொலிக்கு அனுப்பியிருந்தார்.
இதனைக் கண்ட சங்கொலி ஆசிரியரும், கழக பொதுச் செயலாளருமான, தலைவர் வைகோ அவர்கள், அந்த காசோலையை அய்யா ஆனைமுத்து அவர்களிடமே நேரில் சென்று கொடுத்துவிடுமாறு பணித்தார். ஒருவாரம் வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளுக்குப் பதில், சங்கொலி இதழில் நான்கு வாரங்கள் அந்த விளம்பரம் தொடர்ந்து வெளிவர ஏற்பாடு செய்தார். இதனைப்போலவே, தோழர் பொழிலன் அவர்கள், பாவலரேறு நூல் திரட்டுக்களை வெளியிட்டபோதும் அதனையும் மூன்று வாரங்கள், கட்டணமின்றி 'சங்கொலி'யில் வெளியிட ஏற்பாடு செய்தார் வைகோ! லாப நோக்கம், வணிக நோக்கம் இல்லாமல், இலட்சிய வேட்கையோடு முழக்கமிட்டுவரும் ஏடுதான் சங்கொலி!
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், ஏடு நடத்த வேண்டும், 'சங்கொலி' என்ற பெயரில் அது இயங்க வேண்டும் என்று கழகத்தின் தலைவர்களும், தோழர்களும் விரும்பியபோது, 'சங்கொலி' என்ற பெயரில், இலக்கிய ஏட்டினை சிலகாலம் நடத்திக் கொண்டிருந்த சேலம் இருசன் அவர்கள், மகிழ்ச்சியுடன் அதனை ஏற்று, அதற்கான அனுமதியை முறைப்படி வழங்கி உதவினார்!
சங்கொலி ஏட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய அண்ணன் க.திருநாவுக்கரசு அவர்களின் புலமையும், உழைப்பும் 'சங்கொலி' வளர உரமாய் அமைந்தது. பாவலர் பல்லவன், நம்நாடு முத்துகிருஷ்ணன், தண்ணன் மூசா, சிந்தாதிரிப்பேட்டை அ.நா.பாலகிருஷ்ணன் ஆகியோர் 'சங்கொலி' வளர எண்ணத்தால், எழுத்தால் பெரிதும் துணை நின்ற மாமனிதர்கள் ஆவார்கள்!
முரசொலி இதழின் துணை ஆசிரியராக பணியாற்றிய மா.பாண்டியன் அவர்கள், உணர்ச்சித்துடிப்பு கொண்ட வரலாற்று பெருமைகளை விவரிக்கும் அறிவார்ந்த கட்டுரைகளை சங்கொலியில் எழுதினார். வாளாகவும், கேடயமாகவும், மா.பா. அவர்களின் சங்கொலி கட்டுரைகள் தோழர்களுக்கு பெரிதும் பயன் தந்தன. மதுரையில் நடைபெற்ற அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா மாநாட்டில், அந்த மண்ணின் மைந்தன் மா.பா. அவர்களுக்கு தலைவர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து பாராட்டி பெருமைப்படுத்தினார்.
கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன், வழக்கறிஞர் சக்கரவர்த்தி, சமத்துவான், ஜோதி பிரகாசம், வைகறை, அண்ணாவின் அன்பினைப் பெற்ற இரா.செழியன் ஆகிய அறிஞர் பெருமக்களின் எழுத்தால், சங்கொலியின் முழக்கம் கம்பீரமாய் ஓங்கி ஒலித்தது!
சங்கொலியின் துணை ஆசிரியராக அ.சௌரிராசன் அவர்கள் பொறுப்பேற்றிருந்த காலத்தில், அவரது தந்தையாரும் தமிழ்ச்சான்றோர் பேரவை தலைவருமான அய்யா நா.அருணாசலம் அவர்களின் மாணவர் மறுதோன்றி நகலகம் என்ற அச்சகம், சங்கொலி இதழை அச்சிட்டுக் கொண்டுவர துணை நின்றது!
கடந்த இருபது ஆண்டுகளாக வாரந்தோறும் சங்கொலியில் தலையங்கம் தீட்டும் பணியிலும், சிறப்புக் கட்டுரைகளை எழுதும் பணியிலும் கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் அவர்கள், தனது ஓய்வற்ற தொடர் கழக பணிகளுக்கிடையிலும் ஈடுபட்டு, சங்கொலி வளர்ச்சிக்கு துணை நிற்கிறார்!
திராவிட இயக்க எழுத்தாளரும், கழகக்குரல் என்ற இதழை நடத்தியவருமான மு.நெடுமாறன் அவர்கள் சங்கொலி இதழில் திராவிட இயக்க தலைவர்களில் வரலாறு, வரலாற்று நிகழ்வுகள் ஆகியவைகளை விளக்கும் கட்டுரைகள், பெட்டிச் செய்திகள் ஆகியவைகளை தொடர்ந்து எழுதி வந்தார்.
தலைவர் வைகோவின் உதவியாளரும், சிறந்த எழுத்தாளருமான திவான், கவிஞர் தமிழ்மறவன், நினைவில் வாழும் கி.வள்ளுவன், மதுரை எஸ்.நாச்சியப்பன், திருச்சி புலவர் முருகேசன், புலவர் தியாகராசன், எழுத்தாளர் மதுரா, கவிஞர் மா.மணிவேந்தன், பொன்னேரி இராமு, காட்வின், ராஜபாளையம் காதர் மைதீன், புதுச்சேரி சடகோபன், கவிஞர் மன்றவாணன் என எண்ணற்ற தோழர்களின் படைப்புக்களால் 'சங்கொலி' எழுச்சியும், வளர்ச்சியும் கண்டது.
தாயகத்தில் கவி, யுவராஜ், இளங்கோவன், ஆறுமுகம், வில்லியம்ஸ், பக்தவச்சலம், கார்த்திக், மேகலா, தனுஷ், ராஜன், ராணி, சிவா, மூர்த்தி, ஆட்டோ இளங்கோ ஆகியோரின் பேருழைப்பு, சங்கொலி வளர்ச்சிக்கு அடித்தளமாகத் திகழ்கிறது.
சங்கொலியின் முகவர்கள், சந்தாதாரர்கள், புரவலர்கள், சங்கொலிக்கு சந்தா திரட்டித்தரும் கண்ணின் மணிகள், விளம்பரதாரர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால்தான் சங்கொலி தன் இலட்சியப் பயணத்தை தொய்வின்றி தொடர்கிறது.
சங்கொலியின் 30 ஆம் ஆண்டு நிறைவு விழா காணும் இவ்வினிய வேளையில், இவர்கள் அனைவருக்கும், சங்கொலி ஆசிரியர் தலைவர் வைகோ அவர்களின் சார்பில், இதயம் நிறைந்த நன்றி! வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!
நூறாண்டு காணட்டும் நம் வெற்றிச் சங்கொலி!








