'இப்ப எங்க இருக்கீங்க?'
பத்திரிகைத் துறையில் பணியாற்றும் இருவர் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சந்திக்கும் போது ஒருவரையொருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது!
07.04.1997 க்குப் பிறகு இந்தக் கேள்வியை யாரும் என்னிடம் கேட்கும் சூழ்நிலை ஏற்படவில்லை. அன்றுதான் நான் சங்கொலியில் சேர்ந்த நாள். சங்கொலி பொறுப்பாசிரியர் க.திருநாவுக்கரசு அவர்கள், "வைகறை விலகி விட்டார். அவரது இடத்துக்கு பொருத்தமான ஒருவர் தேவை" எனக் கூற, அந்த நண்பரின் (ச.மா.பன்னீர் செல்வம்) மூலம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
சங்கொலி அலுவலகத்தில் திருநாவுக்கரசு அவர்களிடம் என்னுடைய எழுத்து மற்றும் பணி புரிந்த பத்திரிகை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். புன்முறுவலுடன் கேட்டுக் கொண்ட அவர், 'வாங்க... இதுதான் உங்க இடம்' என எதிரேயிருந்த இருக்கையில் அமர வைத்தார்.
நான் சங்கொலி பணியில் சேர்ந்த இந்த நாள் (07.04.1997) தமிழக அரசியலில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்திய நாளாக அமைந்தது. சென்னையில் அன்று மாலை நடைபெற்ற க.திருநாவுக்கரசுவின், திருக்குறள் திறனாய்வு நூல் குறித்த நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களும் கலந்து கொண்டனர்.
சங்கொலிப் பணியில் ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகள். இந்தக் காலத்தில் எவ்வளவோ அனுபவங்கள். பொறுப்பாசிரியர் அந்த வார தலையங்கத்தைத் தீட்டிக் கொண்டிருப்பார். மு.நெடுமாறன் கழகச் செய்திகளைத் தொகுத்துக் கொண்டிருப்பார். நான் கட்டுரைகளையும், நிர்வாகிகளின் உரைகளையும் சரிபார்த்துக் கொண்டு இருப்பேன். மணிவேந்தன் கவிதை எழுதிக் கொண்டிருப்பார்.
வாசலில் நிழலாடும். 'உள்ளே வரலாங்களா?' என கம்பீரமான குரல் கேட்கும். நிமிர்ந்து பார்த்தால் வைகோ அவர்கள். நாங்கள் எழுந்து நிற்க முயலும் போது, 'உட்காருங்க... உட்காருங்க...' என கை அமைர்த்தியவாறு, வைகோ அவர்கள் பொறுப்பாசிரியரின் இருக்கையை நோக்கிச் சென்று, சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டுத் திரும்புவார். 'எல்லோரும் நல்லாயிருக்கீங்களா' என்று முகமலர்ச்சியுடன் கேட்டுவிட்டுச் செல்வார்.
2006 சட்டமன்றத் தேர்தல் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கழகப் பொதுச்செயலாளர் வைகோ தாயகம் வந்தபோது, சங்கொலி தொடர்பாக எங்களிடம் பேசினார். அருணகிரி, நான், ருத்ரன், மோகன்தாஸ், ரதன், கவிஞர் மணிவேந்தன், இளங்கோ, பாடாலிங்கம், பைண்டர் கிருஷ்ணன் அங்கிருந்தோம். 'கால நேரம் கருதாமல் நீங்கள் சங்கொலிக்காக பெரும் பணியாற்றுகிறீர்கள். பத்திரிகை இன்னும் சிறப்பாக வெளிவர எல்லோரும் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்' என பொதுச் செயலாளர் கூற, மகிழ்ச்சியுடன் எங்களது ஒப்புதலைத் தெரிவித்தோம்.
கழக நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரைகளை அவரது உதவியாளர் அருணகிரி சங்கொலிக்காக கணினியில் அச்சிட்டுத் தருவார். ஒலி நாடாவில் பதிவான வைகோவின் உரைகளை நானும் பலமுறை சங்கொலிக்காக எழுதித் தந்திருக்கிறேன்.
கணிப்பொறி பிரிவில் சேர்மன் துரை, கணபதி, அல்லாபிச்சை, பாலகுமார், கிருஷ்ணமூர்த்தி, பாலு, பாடாலிங்கம், அமுதன், மாணிக்கவேல் என தம்பிகள் பலர் பணியாற்றினர். தற்போது இளங்கோவும், ஆறுமுகமும்தான் அப்பணியினைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இதழ் வடிவமைப்பாளர்களாக சிவா, காண்டீபன், ஷீர், ரதன் சந்திரசேகர் ஆகியோர் துணை புரிந்திருக்கின்றனர். இவர்களில் சிவாவும், ரதனும் திரைப்பட இயக்குநர்களாகிவிட்டனர். அலுவலகப் பணிகளில் மணி, பூங்காவனம், பிச்சைக்கனி, வி.ஜார்ஜ், பாஸ்கர் போன்றோர் உதவினர். தலைமைக் கழக அலுவலகப் பணிகளில் ருத்ரன், மோகன்தாஸ், யுவராஜ், வில்லியம்ஸ், கார்த்திக், பத்து (எ) பக்தவத்சலம் ஆகியோர் உடன் இருந்தனர்.
மா.பாண்டியன், கவிஞர் பல்லவன், நம்நாடு முத்துகிருஷ்ணன், அ.நா.பாலகிருஷ்ணன், வி.கே.பாலகிருஷ்ணன், தண்ணன் மூஸா, புலவர் வெற்றியழகன், மு.செந்திலதிபன், ஆ.வந்தியத்தேவன் ஆகியோர் சங்கொலியில் தொடர்ந்து எழுதினர்.
எனது பணிக்காலத்தில் ஒரேயொரு முறை பொதுச் செயலாளர் என்னை கடிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. அது அந்தவாரம் இடம்பெற்ற ஒரு கார்ட்டூன் சம்பந்தப்பட்டது. அரசியல் தலைவர் ஒருவரை கிண்டலடித்து வெளியிடப்பட்ட அந்தக் கார்ட்டூன் கொச்சையாக இருப்பதாக கோபித்தார் வைகோ.
'யார் குறித்து நாம் கார்ட்டூன் போடுகிறோமோ அவரே ரசிக்கும்படி அது இருக்க வேண்டும். அவர்களை காயப்படுத்துவதுபோல் இருக்கக் கூடாதென' கண்டிப்புடன் கூறிய வைகோ, இனிமேல் சங்கொலி கோப்புடன் கார்ட்டூனையும் எனது பார்வைக்கு அனுப்ப வேண்டும்' என உறுதிபடத் தெரிவித்தார். 'இந்த வாரம் அச்சான சங்கொலியின் ஒரு பிரதி கூட வெளியே போகக் கூடாது. யார் கையிலும் கிடைக்கக் கூடாதென' கூறியதோடு, 'அந்தக் கார்ட்டூனை எடுத்துவிட்டு வேறொன்றைப் போட்டு அச்சுக்கு அனுப்புங்கள்' என கண்டிப்புடன் தெரிவித்தார். அவர் சொன்னபடி ஏற்கனவே அச்சான பிரதிகளை பத்திரப்படுத்தி, வேறொரு படத்தைப் போட்டு மீண்டும் சங்கொலியை அச்சிட்டோம்.
சங்கொலி தொடர்பாக சில நேரங்களில் மா.நன்னன் அவர்கள் பேசுவதுண்டு. மா.நன்னன் அவர்கள் அந்த வார சங்கொலியின் நிறை குறைகளை சுட்டிக்காட்டி ஒன்றைத் தெரிவிப்பார்: "சங்கொலியின் ஆசிரியர் வைகோ, உங்களைப் போன்றவர்கள் சரியாக செயல்படுகிறீர்கள் என்ற நம்பிக்கையில்தான் அரசியல் பணிகளில், பயணங்களில் கவனம் செலுத்துகிறார். அதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள்" என்பார்.
எனது சங்கொலி பணிக்காலத்தில் வைகோ அவர்கள், மெய்வழிச்சாலையில் நடைபெற்ற எனது மூத்த மகள் திருமண நிகழ்விலும், சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறப்பித்தார். திராவிட இயக்க இதழ்களில் சங்கொலியும் பெரும் பணி ஆற்றி வருகிறது. அந்தப் பணியில் நானும் சிறிது காலம் பங்கேற்றிருக்கிறேன் என்பதை எண்ணும்போது பெருமிதம் ஏற்படுகிறது.







