கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான Vaiko in Parliament நூல் வெளியீட்டு விழா 04.08.2026 அன்று புதுடெல்லியில் உள்ள Constitution Club of India அரங்கத்தில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு இந்திய நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் உரையாற்றும்போது, “வைகோ திறந்த மனதுடன் இருப்பவர்; பரந்த பார்வை கொண்டவர்” என்று குறிப்பிட்டார். அவரது உரை வருமாறு:
திரு. வைகோ அவர்களே, அகிலேஷ் யாதவ் ஜி, ஃபரூக் அப்துல்லா ஜி, ப.சிதம்பரம் ஜி, ராஜ்மோகன் ஜி, எம்.ஏ.பேபி ஜி, டி.ராஜா ஜி, சாகரிகா கோஷ் ஜி, திருமாவளவன் ஜி, ஜி.கே.வாசன் ஜி, மாணிக்கம் தாகூர் ஜி, ஜான் பிரிட்டாஸ் ஜி, துரை வைகோ ஜி, மேடையில் அமர்ந்துள்ள இந்தியா கூட்டணியின் தலைவர்கள், சகோதரர்களே, சகோதரிகளே, ஊடக நண்பர்களே...
இன்றைய இந்த மாலை நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
திரு. வைகோ அவர்களுக்கு எனது வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்திற்காக மட்டுமல்ல; தனது நீண்ட அரசியல் பயணம் முழுவதும் அவர் கடைபிடித்து வந்த கொள்கை உணர்விற்காகவும் அவரைப் பாராட்டுகிறேன்.
ஒரு அரசியல்வாதியை நான் மதிப்பிடும்போது, முதலில் மிக முக்கியமாக நான் கவனிப்பது அவரது கொள்கையில் எந்த அளவிற்கு பற்றுறுதி கொண்டு உள்ளார்கள் என்பதைத்தான்.
ஒருவர் எந்தக் கொள்கைகளை கடைபிடிக்கிறார்? அந்தக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடிக்கிறாரா? அல்லது ஒரு நாள் ஒன்றைப் பேசி, அடுத்த நாள் வேறொன்றைப் பேசி, மூன்றாவது நாள் இன்னொன்றைப் பேசுகிறாரா? என்பதை கவனிப்பேன்.
இந்திய நாட்டில் தொடர்ச்சியாக, கொள்கையில் உறுதியான பற்று கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் திரு. வைகோ அவர்களும் ஒருவர்.
அவர் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்கிறார். அந்த நிலைப்பாட்டில் சமரசம் செய்வதில்லை. அவரது கொள்கை நிலைப்பாடு தெளிவானது.
திரு. வைகோ அவர்களிடம் இன்னொரு சிறப்பான அம்சமும் உள்ளது. இப்போது அவரை அறிந்து கொள்ளும் வாய்ப்பும், அவருடன் பழகும் பெருமையும் எனக்குக் கிடைத்திருக்கிறது.
அவர் இதை உங்களிடம் (வைகோ) சொல்லியிருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எங்களுக்குள் (துரை வைகோ) ஒரு நல்ல நட்பு இருக்கிறது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறோம்.
திரு. வைகோ அவர்களைப் பற்றிய இன்னொரு விஷயத்தையும் நீங்கள் குறிப்பிட்டீர்கள் அவர் மிகவும் இளமையானவர் என்று.
ஆனால், அவர் ஒரு இளமையான, அழகான, கம்பீரமான, துடிப்பான மனிதர் என்று நீங்கள் சொல்லவில்லை!
ஆனால், உண்மையில், இளமை என்றால் என்ன? வயதானவருக்கும் இளைஞருக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு இளைஞர் என்பவர் திறந்த மனதுடன் இருப்பவர். கேள்விகளை எழுப்புபவர். பல்வேறு விஷயங்களை ஆராய்பவர். மிகப்பெரிய பரந்த பார்வைக் கொண்டவர்.
சில நாட்களுக்கு முன்பு நான் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதைப் போல, அவருக்கு 82 வயதாகிறது. ஆனால், மற்றவர்களைப் போல அல்லாமல், அவர் இன்னும் வாழ்க்கையின் மாணவராகவும், அரசியலின் மாணவராகவும் இருக்கிறார். அவர் அடிப்படையான கேள்விகளைக் கேட்கிறார்.
நமது நாடு இன்று ஒரு வித்தியாசமான காலகட்டத்தை எதிர்கொண்டிருக்கிறது.
மாணவர்கள் கடுமையான வேதனையுடன் தெருக்களில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை இல்லை. தேர்வுகளில் நியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள். செயல்படக்கூடிய, நியாயமான கல்வி அமைப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
மறுபுறம், பிரதமர் அவர்களை மன்னித்துக் கொண்டிருக்கிறார்.அவர்களை மன்னிப்பதற்கு அவர் யார்?
இந்தியாவின் எதிர்காலத்தை மன்னிக்கும் உரிமை தனக்கு இருப்பதாக அவர் எங்கிருந்து கருதுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால், அவர் அதைச் செய்யத் துணிந்திருக்கிறார்.
பிரதமரின் செயல்களுக்குப் பின்னாலும், அவரது நண்பர்களின் செயல்களுக்குப் பின்னாலும், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிந்தனைக்குப் பின்னாலும், மிகவும் ஆபத்தானதும் கடுமையானதுமான ஒரு கருத்து உள்ளது.
அந்தக் கருத்து என்னவென்றால், இந்த நாடு பல்வேறு மக்களுக்கானது அல்ல என்பதாகும்.
ஆனால், நமது அரசியலமைப்பில் மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது:
“இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியம்.”
ஒரு மாநிலம் என்பது இந்திய மக்களைக் குறிப்பதாகும்.
தமிழ்நாடு நாம் வெறுமனே வார்த்தைகளைச் சொல்லவில்லை.
“தமிழ்நாடு” என்ற அந்த வார்த்தைக்குள் தமிழ் மக்களின் வரலாறு, தமிழ் மக்களின் மொழி, தமிழ் மக்களின் வலி, துன்பம், மகிழ்ச்சி அனைத்தும் அடங்கியுள்ளன.
எனவே, ஒவ்வொரு மாநிலமும் ஒரு வரலாற்றை, ஒரு பாரம்பரியத்தை, ஒரு மொழியை, நமது மக்களின் ஒரு தனித்துவமான வெளிப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று அரசியலமைப்பு கூறுகிறது.
எனவே, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தன்னை வெளிப்படுத்துவதற்கான உரிமை உள்ளது.
ஒவ்வொரு மாநிலமும் நியாயமாக நடத்தப்பட வேண்டும்.
நான் தொடர்ச்சி பற்றிப் பேசும்போது, திரு. வைகோ ஒரு கொள்கையில் உறுதியான அரசியல்வாதி என்று கூறியபோது, அவர் தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வந்த ஒரு விஷயம் இருக்கிறது. அது தமிழ் மக்களின் விருப்பங்கள், கனவுகள், கற்பனைகள்.
தமிழ் மொழி, தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழ் நாட்டின் துயரங்கள் இதுதான் உண்மையில் இந்தியா என்பதன் அர்த்தம்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தன்னை வெளிப் படுத்தும் உரிமை உள்ளது. ஒவ்வொரு மாநிலத் திற்கும் தனது சொந்த கலாச்சாரத்திற்கான உரிமை உள்ளது. தனது சொந்த வரலாற்றிற்கான உரிமை உள்ளது. தனது சொந்த மொழிக்கான உரிமை உள்ளது.
ஆனால், இங்கே திடீரென்று சில அறியாமை கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் மொழிபுரியவில்லை. தமிழ்மக்களைப்புரிந்துகொள்ள வில்லை. மராத்திய மக்களைப் புரிந்து கொள்ள வில்லை. வங்காள மக்களைப் புரிந்து கொள்ள வில்லை. கேரள மக்களைப் புரிந்து கொள்ளவில்லை.
அவர்கள், “இல்லை” என்று கூறுகிறார்கள்.
இந்த வரலாறுகள் எதுவும் முக்கியமல்ல. இந்தக் கற்பனைகள் எதுவும் முக்கியமல்ல. இந்த மொழிகள் எதுவும் முக்கியமல்ல. முக்கியமானதும, பொருத்த மானதும, ஒரே ஒரு மொழியும் ஒரே ஒரு வரலாறும் மட்டுமே அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிர்ணயிக்கப்படும் மொழியும் வரலாறும்தான் என்று அவர்கள் கருதுகிறார்கள். இதுதான் உண்மையில் நடக்கும் போராட்டம். இதனால்தான் மாணவர்கள் வெளியே போராடுகிறார்கள்.
ஏனென்றால், இந்தியா ஒருபோதும் தனது கலாச் சாரங்களில் எதையும், தனது மொழிகளில் எதையும், தனது வரலாறுகளில் எதையும் யாராலும் மிதித்து அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளாது.
அதுதான் இந்த மேடையில் இருக்கும் அனைவரும் செய்கிற பணியாகும்.
அவர்கள் தங்களுக்கே உரிய விதத்தில், தங்களது மாநிலத்திற்கே உரிய விதத்தில், தங்களது கற்பனை மற்றும் சிந்தனைக்கே உரிய விதத்தில் இந்தியாவின் கருத்தை இந்தியாவின் அடிப்படை உணர்வை பாதுகாக்கிறார்கள்.
எனவே, திரு. வைகோ அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்திற்கும், இந்திய அரசியலமைப்பிற்கும் செய்துள்ள சேவைக்காக, என் இதயத்தின் ஆழத்திலிருந்து அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அவரது புத்தகத்தை வெளியிடுவதும், அவரைப் பற்றி சில வார்த்தைகள் பேசுவதும் எனக்கு ஒரு பெருமை. அவர் நம் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி.
அவர் என்னிடம் வந்து, “எனது புத்தகத்தை வெளியிட நீங்கள் வருவீர்களா?” என்று கேட்டார்.
நான் அவரிடம், “வைகோ ஜி, நீங்கள் என்ன மாதிரி யான கேள்வியைக் கேட்கிறீர்கள்? இது நீங்கள் கேட் கவே வேண்டிய கேள்வி அல்ல” என்று சொன்னேன்.
“நீங்கள் அழைத்துவிட்டீர்கள். எனவே, நான் வருகிறேன்.”
இதுதான் எங்களுக்கிடையிலான மரியாதையும் உறவும்.
இந்த மேடையில் இருக்கும் அனைத்து தலைவர் களுக்கும், இங்கு வந்திருக்கும் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும், குறிப்பாக நீங்கள் கூறியதுபோல, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இன்பத்திலும் துன்பத்திலும் உங்களுக்கு ஆதரவாக இருந்து, திரு. வைகோ அவர்களுக்காக தங்களது இரத்தத்தையும் கண்ணீரையும் அர்ப்பணித்துள்ள தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
இவ்வாறு ராகுல் காந்தி அவர்கள் உரையாற்றினார்.







